Thursday, March 7, 2019

“பருந்தான ஊர்க்குருவிகள்”- 01

“பருந்தான ஊர்க்குருவிகள்”
       உயர உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்பது பழைய மொழி; முயற்சியும் பயிற்சியும் இருந்தால் குருவிகளும் பருந்தாகும் என்பதை புது மொழி; அந்த புதுமொழிக்கு வடஇவம் தந்த நடைமுறை யதார்த்த உதாரணங்களோடு இங்கே உங்கள் பார்வைக்கு ஒரு தொடராக அளிக்கிறேன்.  இங்கு பதிவிடப்படும் கட்டுரை நாயகர்கள் நான்  பார்த்து பழகியவர்கள், நான் கேட்டறிந்ததவர்கள், படித்து  உணர்ந்தவர்கள் என பல வகைப்படுவர். இதில் பலரை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்; பழஹகியிருப்பீர்கள்; கேட்டிருப்பீர்கள்; படித்திருப்பீர்கள்- ஆனால் என்ன? நல்லவற்றை, நல்ல முயற்சியாளர்களை திரும்ப திரும்ப பேசுவதிலும் எழுதுவதிலும் தவறில்லை என கருதுவதால் இந்த எளிய முயற்சி…..                 2000 ம் ஆண்டு...புத்தாயிரத்தாண்டு.....உலகளவில் ஒரு பரபரப்பு ஏற்படுத்திய ஆண்டு....Y2K பிரச்சனையில் பன்னாட்டு நிறுவனங்கள் பதைத்துக்கொண்டிருந்த நேரம்....கணிணியில் ஏதாவது பட்டம், பட்டயம் அல்லது சான்றிதழ் என்று இருந்தாலே இந்திய இளைஞர்களை அள்ளிக்கொண்டு செல்ல அயல்நாட்டு நிறுவனங்கள் ஆலாய்ப்பறந்த நேரம்.....அந்த ஆண்டு மே மாதம் +2 தேர்வு முடிவுகள் வெளியான காலை...மதுரை மாணவர் ஒருவர் வணிகவியலில் மாநிலத்தில் முதல் மாணவனாக வெற்றி பெற்றிருந்ததாக அறிந்து பத்திரிக்கையாளர்கள் அவரைத்தேடி மதுரையின் முட்டுச்சந்துகளில் அலைந்து அவர் வீட்டைக்கண்டுபிடித்தனர். அம்மாணவனின் பெற்றோர் மலங்க மலங்க விளிக்க, அம்மாணவனோ அருகாமையிலிருந்த பரோட்டா கடையில் தினக்கூலி ரூ.30 க்கு வேலை பார்துக்கொண்டிருந்தார்.ஏழ்மை பார்த்தவுடன் தெரிந்தது. அருகாமையிலுள்ள மாநகராட்சிப் பள்ளியில் தமிழ் வழிக்கல்வி...பகுதி நேர வேலை....பேற்றோருக்கு சிரமம் கொடுக்க வேண்டாமென்ற எண்ணம்....தந்தை அலுமனியப்பாத்திரம் விற்பவர்..தாயோ வீட்டு வேலை பார்ப்பவர்....மூன்று குழந்தைகளில் இருவர் பள்ளியில் இடை நிற்க இவர் மட்டும் பள்ளியிறுதித்தேர்வில்  சாதனை படைத்துள்ளார்....அவரிடம் வழக்கமான கேள்வி...." நீங்கள் எதிர்காலத்தில் என்ன ஆகப்போகிறீர்கள்?"  முதலிடம் பெற்ற எல்லா மாணவர்களும் சொல்வதைப்போல் இவரும் தயக்கமே இல்லாமல் IAS அதிகாரிஆகி சமுதாய முன்னேற்றத்துக்குப்பாடுபடுவேன் என்றார். அன்றைய தினம் மாலைபத்திரிக்கைகளில் அது ஒரு செய்தி...அவ்வளவுதான். அடுத்தடுத்து வந்த பரபரப்பு அரசியல், விளையாட்டு நிகழ்வுகள், அடுத்த ஆண்டு இதே போல் தேர்வு முடிவுகள் ஆகிவற்றால் இந்த செய்தி அனேகமாக  எல்லோராலும் மறக்கப்பட்டு விட்டது.
       2009ம் ஆண்டு....மத்திய அரசின் குடிமைப்பணித்தேர்வு முடிவுகள்  வெளியான நேரம்...அகில இந்திய அளவில் 53 வது இடத்தப்பிடித்து IAS அதிகாரியானார் தமிழகத்தைச்சேர்ந்த திரு.வீரபாண்டியன் என்ற செய்தி மீண்டும் ஒரு பரபரப்பக்கூட்டியது...காரணம், 2000 ம் ஆண்டே நான் எதிகாலத்தில் IAS அதிகாரியாக வருவேன் என்று ஆணித்தரமாகக்கூறிய அதே 'பரோட்டா மாஸ்டர்' வீரபாண்டியன்தான் இந்தச்சாதனைக்கும் உரியவர்...2000க்கும் 2009க்கும் இடையில் எத்தனை போராட்டங்கள்,மாற்றங்கள், சறுக்கல்கள்.....+2 ல் முதலிடம் படித்ததால் சென்னை லயோலா கல்லூரியில் கட்டணமில்லாமல் படிக்க இடம்....விடுதியில் கோவையைச்சேர்ந்த ஒரு நல்ல நட்பு வட்டம். வேறென்ன வேண்டும். நண்பர்களின் உற்சாகமும் உதவியும் வீரபாண்டியனை அரசு நடத்தும் குடிமைப்பணிப்பயிற்சி நிலையத்தில் கொண்டுசென்று  நிறுத்தியது. நான்கு முறை வெற்றி வாய்ப்பு கைநழுவிப்போனது....IAS தேர்வு என்றால் சும்மாயில்லை. 4 லட்சம் பேர் எழுதும் போட்டியில் முதல் 400 பேரை மட்டுமே தேர்ந்தெடுப்பது....இதில் மூன்று நிலைகளில் தேர்வுகள் நடக்கும். நான்காவது முறை ஒரே ஒரு மதிப்பெண்ணில் வெற்றியை இழந்தார்....மனம் தளரவில்லை...இடைப்பட்ட காலத்தில் தன்னைப்போன்றே அகில இந்தியத்தேர்வுகளுக்குத்தயார் செய்யும் மாணவர்களுக்கு வகுப்பெடுத்து அந்த வருமானத்தில் தன் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து கொண்டே இருந்தார்... ஐந்தாவது முறை அகில இந்திய அளவில் 53 வது இடம்...என்னவொரு வெற்றி.....ஒட்டு மொத்தத் தமிழகமே வீரபாண்டியனைத்திரும்பிப்பார்த்தது. அவருடைய கனவு; அதை நனவாக்க அவர் எடுத்த முயற்சி; உழைப்பு; மற்ற இளைஞர்களுக்கு ஒரு பாடம்--தோல்வியில் துவண்டு விடக்கூடாது; எந்தத்தடையும், சுற்றியுள்ள குறைகளும் நமது குறிக்கோளை அடைவதிலிருந்து நம்மைத்தடுத்து விடக்கூடாது; கூடா நட்பு கேடாய் முடியும்; நல்ல நட்பே நன்மையில் முடியும்; இப்படி சொல்லிகொண்டே போகலாம். வாத்துக்கூட்டம்தான்  குறைகளைக்கூவிக்கொண்டு, குவேக், குவேக் என்று கத்திகொண்டு குட்டையிலேயே காலம் கடத்திவிடும். ஆனால் கழுகுகளோ கடும் மழையிலும் மேகக்கூட்டத்தைப் புறந்தள்ளி அதற்கும் மேலே பறந்து சாதனை படைக்கும்.....நாம் கழுகா இல்லை வாத்தா என்பதை  நாம்தான் தீர்மானிக்க வேண்டும். எந்தப்பின்னணியுமில்லாமல், தன் சமூகப்பொருளாதார நிலையைத்தடையாக எண்ணாமல், உயர்ந்த லட்சியத்தைக் கைக்கொண்டு, விடாமுயற்ச்சியுடன் நேர்மையாக உழைத்து இன்று ஆந்திரமாநிலம் விஜயவாடா மாநகராட்சி ஆணையராகப்பணியாற்றுகிறார் திரு.வீரபாண்டியன்கணேசன்,IAS..
           தன் உழைப்பால், முயற்சியால் அவ்வை சொன்ன " கொடிதினும் கொடிது இளமையில் வறுமை" என்ற காரிருள் மேகத்துக்கும் மேலே பறந்து சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது இந்த மதுரை மண்ணின் மகத்தான குருவி...                                                                                                                                                                                                                                          ------------குருவிகள் பறக்கும்.

கட்டாயக்கல்விச்சட்டமும்
தனியார் பள்ளித் 'தலை'யின் ‘மனநிலை’யும்
                ழை மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதால் பள்ளியின் ஒழுக்கமும், தரமும் கெட்டுவிடும், ஆசியர்களிடமும் ஒழுங்கு குலையும் என்று சென்னை அடையாறிலிருக்கும் Sri Sankara Senior Secondary School கருதுவதாக வந்த செய்தியைப் பார்த்திருப்பீர்கள்.  இதற்கு எடுத்துக்காட்டாக  ஒரு மாணவரின் செயல்திறனையும் அவரது பொருளாதார நிலைமையையும் இணைத்து ஒரு அறிக்கையை சுற்றுக்கு விட்டுள்ளார் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் சுபலா அனந்தநாராயணன். அதோடு, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், அனைவருக்குமான கல்வி உரிமை மசோதாவை எதிர்த்து போராடும் படியும் தூண்டியிருக்கிறார். முதலில் இந்த கல்வி கற்கும் உரிமை என்றால் என்ன? 60 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டம்தான் அது. பாதிக்கும் மேற்பட்ட இந்தியக் குழந்தைகள் குறைந்தபட்சம் எட்டு வருடம் கூட கல்வி கற்பதில்லை. ஒன்று பள்ளியின் பக்கமே வருவதில்லை அல்லது பாதியில் படிப்பை விட்டு நின்று விடுகிறார்கள். இந்த பிள்ளைகளில் மிகப் பெரும்பான்மையினர் வசதி வாய்ப்பற்ற ஏழை மக்கள்.  இந்த கல்வி கற்கும் உரிமை, கோத்தாரி கல்விக் குழுவினரால் பொது பள்ளிக்கூட அமைப்பை நோக்கிய ஒரு சிறுமுயற்சியாக, 1964-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
                இந்திய கல்வியமைப்பில், சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகள் உருவாக்கியுள்ள ஏற்றதாழ்வுகளை களைவதற்காக செய்யப்பட்ட சமூக சீர்திருத்தமே இந்தப் பொது பள்ளிக்கூட அமைப்பு. இந்த மசோதா 1964,1986 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் முறையே நிறைவேற்ற முயன்றும் தோல்வியையே கண்டது.  இந்த மசோதாவுக்காக, பட்ஜெட்டில் 12,000 கோடிகள்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே, ஆரம்பக் கல்விக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கி வரும் நாடு இந்தியாதான். இதுவும் வருடா வருடம் குறைந்து கொண்டே வருகிறது. இது முதலில் தில்லியில் நடைமுறைக்கு வந்து, இப்போது அனைத்து பள்ளிகளிலும் அமுலாகத் தொடங்கியிருக்கிறது.
                இந்த மசோதாவின்படி, குழந்தைகளை, பெற்றோர்களை இன்டர்வியூ என்ற பெயரில் நேர்காணல் செய்வது மற்றும் கேபிடேசன் கட்டணம் வசூலிப்பது இரண்டுமே தண்டனைக்குரியது. கேபிடேசன் கட்டணம் வசூலித்தால் கட்டப்படும் பீஸ் தொகையைப்போல் 10 மடங்கும்,  குழந்தைகளையும் பெற்றோரையும் நேர்முகம் கண்டால் 25000 ரூ முதல் 50000 ரூ வரையும் அபராதம் வசூலிக்கப்படும். 25 சதவீத இடங்களை வசதி வாய்ப்பற்ற ஏழை மக்களுக்கு ஒதுக்க வேண்டும்.
ஆரம்பக் கல்வியை முடிக்கும்வரை பள்ளி நிர்வாகம் குழந்தைகளை தண்டிப்பதோ அல்லது பள்ளியை விட்டு அனுப்புவதோ கூடாது. ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் அந்த வட்டாரத்திலிருக்கும் பள்ளியிலேயே படிக்க வேண்டும்.இவையெல்லாம் அதில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள். இத்தனைக்கும், கல்வி கற்கும் உரிமை, முதல் எட்டு வருடங்களுக்கு மட்டுமே கல்வியை உறுதி செய்கிறது. (அதற்கு பிறகு அந்த மாணவர்களை பற்றிய கவலை யாருக்கும் இல்லை. பள்ளிகள் நினைத்தால் வெளியேற்றலாம். ) கல்வியை முழுக்க தனியார் மயம் ஆக்கிய நிலையில் இந்த மசோதா எதையும் மாற்றாது. மேலும் இனி அரசுக் கல்லூரிகள், பள்ளிகள் ஏதும் புதிதாகத் திறக்கப்படாது என்ற சாத்தியத்தையும் இம்மசோதா கொண்டிருக்கிறது. முக்கியமாக தனியார் பள்ளிகள், கல்லூரிகள் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதை இம்மசோதா தீர்த்திருந்தால் இப்படி தனியே ஏழைகளை சேர்க்க வேண்டுமென்ற சலுகை தேவைப்படாமாலேயே போயிருக்கலாம்.
                இருப்பினும் இந்த பெயரளவு சலுகைகளைக் கூட தாங்கமுடியாமல் இந்த தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் லாபி வேலையை செய்யத் துவங்கியுள்ளன. இந்த மசோதா இவர்களது வருமானத்தை பாதிக்கிறதாம். அதன் முதல் கட்டமாகத்தான் இந்த இரு பள்ளிக்கூடங்கள் வேலையை காட்டத் தொடங்கியிருக்கின்றன -சங்கரா சீனியர் செகண்டரி பள்ளியும், லேடி ஆண்டாள் பள்ளியும்.. இன்று  பள்ளிக்கூடம் என்பது ஒரு பெரிய பிசினஸ். சென்னையில்தான் எத்தனை வகை வகையான பள்ளிக் கூடங்கள். வகுப்பறைகளில் ஏசியுடன், ஏசியில்லாமல், ஒன்றாம் வகுப்பிலிருந்தே லேப்டாப், பாடதிட்டங்கள்/வீட்டுப்பாடங்கள் ஆன்லைனிலே செய்து அனுப்பும் படியான வசதிக்கொண்டவை, என் ஆர் ஐ பிள்ளைகள் படிக்க என்று ஏராளமான வகைகள் உண்டு. ஒவ்வொரு பள்ளியும் அதன் வசதிகளுக்கும், பெயருக்கும் தகுந்தபடி நுழைவுக்கட்டணங்களை வசூலிக்கின்றன, அவை லட்சங்களில் ஆரம்பித்து ஆயிரங்களில் முடிகிறது. அந்த பிசினஸின் முக்கியத்துவம் கருதித்தான் அரசியல்வாதிகள், ரவுடிகள், அவர்களது வாரிசுகள் என்று பலரும், கல்வி கற்றிருக்கிறார்களோ இல்லையோ கல்வித்தந்தையும் கல்வித்தாயுமாக பரிணாமம் எடுக்கின்றனர். இப்படி, ஆரம்பக் கல்வியிலேயே வர்க்கப் பாகுபாடுகள் நிறைந்திருக்கிறது. வசதி வாய்ப்புள்ளவர்கள் பெரிய பணக்கார பள்ளிக்குச் செல்கிறார்கள். இல்லாதவர்கள், விலை குறைந்த படிப்பை படிக்கிறார்கள். ஆரம்ப கல்வியிபிலிருந்து தொடங்கும்  இந்த முரண்கள் முடிவடையாததது. பொதுவாக, நகருக்குள் இருக்கும், இந்த பள்ளிகளில் படிக்க ஒன்று நடிக நடிகையர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள், வசதியான நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பிள்ளைகளாக இருக்க வேண்டும் அல்லது என் ஆர் ஐக்களின் பிள்ளைகளாக இருக்க வேண்டும். இதுதான் அடிப்படை தகுதி. அதற்கு அடுத்த லெவலில் இருப்பது நடுத்தர வர்க்கத்திற்கான பள்ளிகள். இந்த பள்ளிகளுக்குத்தான் அப்துல்கலாம் கனவு காணச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்-அவர் படித்து வந்த பின்னணியை மறந்துவிட்டு. இந்தியா வல்லரசாவதைப் பற்றி பாடம் நடத்துகிறார். ஏழை மக்களை தூக்கியெறிந்துவிட்டால் இந்தியா வல்லரசாகி விடும் போல.
                உயர்ரகக் கல்வி நிறுவனங்கள், சிறந்த பள்ளி என்பதெல்லாம் ஒரு ஏமாற்று. ஒரு சிறந்த பள்ளி என்பது படிப்பில் எப்படிபட்ட மாணவராக இருந்தாலும் தேர்ச்சியடையச் செய்ய வேண்டும். அதை விடுத்து, பள்ளிக்கூட ஆசிரியர்களும், பெற்றோர்களும்.. சங்கம் அமைத்து எந்த மாதிரியான  குழந்தைகளை சேர்த்து கல்வி புகட்டுவது என்றும் பள்ளிக்கூட சூழலுக்கும் தரத்துக்கும் பங்கம் வராத வகையில் பள்ளியை பாதுகாப்பதும் எங்கள் உரிமை என்று சொல்வது சொத்துரிமை சார்ந்ததேயன்றி கல்விப்பணி சார்ந்ததல்ல. அந்த பிள்ளைகள் வந்து சேர்ந்தால் அனுமதி மறுக்க முடியாது, வகுப்பறைகள் முதல் பள்ளிக்கூடமே பாழாகி விடும், அதோடு உங்கள் பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படுமென்று அந்த தலைமையாசிரியர் பதறுகிறாரே, ஏன்? தங்கள் பிள்ளைகள் ஏழை மாணவர்களோடு  ஒன்றாக அமர்ந்து கல்வி கற்றால் ஆசிரியர்களும் பெற்றோரும் ஏன் கதறுகிறார்கள்? எது அவர்களை தடுக்கிறது? ஏழை மாணவர்கள் அழுக்காக இருப்பார்கள், கெட்ட பழக்க வழக்கங்கள் உடையவர்கள் அதைப் பார்த்து எங்கள் பிள்ளைகளும் கற்றுக் கொள்வார்கள் என்று அரற்றுகிறார்கள்.
                வகுப்பறையில், ஏழை மாணவர்கள் இருந்தால் பாடம் நடத்த கத்த நேரிடும், பாடங்களை படிக்க கஷ்டப்படுவார்கள் என்கிறார்கள் ஆசிரியர்கள் அவர்கள் பங்குக்கு. ஏழை மாணவர்களோடு சேர்ந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் பேச வராது என்றெல்லாம் சாக்கு போக்குகள் சொல்கிறார்கள். குஷ்பூவின் பிள்ளைகள் லேடி ஆண்டாள் பள்ளியில் படிக்கின்றனர். ஏழைகளின் ஓட்டு வேண்டி பிரச்சாரம் செய்த குஷ்பூ அவர்களது பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள நிர்வாகத்தினரிடம் பிரச்சாரம் செய்வாரா?
ஏழை மாணவர்களுடன் பழகுவதால்தான் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் கெட்ட வார்த்தைகளை பேசக் கற்றுக் கொள்வதாக மத்திய தர வர்க்கத்தில் ஒரு பொது கருத்து நிலவுகிறது. ஏன், பணக்கார வீட்டுப்பிள்ளைகள் கெட்டவார்த்தைகள் பேசுவதேயில்லையா? நம்முன் நிறுத்தப்படும் முகங்களைப் பாருங்கள். விளம்பரங்களில் சச்சின் வருவதைப் போல தன்ராஜ் பிள்ளை ஏன் வருவதில்லை? சற்று வெள்ளையாக, படித்தவர் போல நடை உடை பாவனைகளைக் கொண்டிருந்தால் “வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்” என்றுதானே நம்புகிறார்கள். நடைமுறையில், எல்லா பித்தலாட்டங்களும் எங்கிருந்துதான் உதிக்கின்றன என்பதை நாம் அறிவோம். இதற்கு ப.சிதம்பரத்திலிருந்து  உதாரணங்கள் உண்டு. இந்த முரணின் சற்றே பெரிய வடிவம்தான் கடந்த பிப்ரவரி மாதம்  நடந்த திவ்யாவின் படுகொலை. வகுப்பறையில் வைத்திருந்த பணம் காணோமென்றதும் என்ன நடந்தது? ஏழை என்பதாலேயே திவ்யா திருடியிருக்கக்கூடுமென்று பேராசிரியர்களுக்கு சந்தேகம் வந்தது. உடைகளைக் களையச் சொல்லி சோதனை செய்துள்ளனர். ஏன் மற்ற மாணவியருக்குச் அது போல சோதனை செய்யவில்லை? திவ்யாவை மட்டும் அப்படி சோதனை செய்ய என்ன காரணம்? ஏழை எனபதுதானே. ஏழை என்றால் திருடுவார்கள் என்ற பொதுபுத்திதானே. இதே பொதுபுத்தி பள்ளிக்கூட நிர்வாகத்தினருக்கும் இல்லாமலிருக்குமா? இதே பொதுபுத்தி, ஏழைப்பிள்ளைகள் நன்றாக படித்தால் எப்படியெல்லாம் கொட்டப் போகிறதோ?
                நசிந்து போன விவசாயம், நலிந்துவிட்ட தொழில்கள், வேலையின்மை, கடன், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக பிடுங்கபட்ட விளைநிலங்கள்  என்று பல காரணங்களால் மக்கள் இந்தியாவின் வடகோடிக்கும் தென்கோடிக்கும் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பீகார், ஒரிஸ்ஸாவிலிருந்து 100 ரூபாய்க்கும் 200 ரூபாய்க்கும் கூலிக்கு வந்து கட்டிடவேலை முதல் ஓட்டல் வேலை வரை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதேபோல, தமிழக விவசாயிகள் பாத்திரம் பண்டங்களை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக பிழைப்பு தேடி அலைந்துக்கொண்டிருக்கிறார்கள். நிரந்தர வேலையில்லாமல் கிடைக்கும் வேலையை செய்து பிழைக்கும்படி நகரத்தை நோக்கி துரத்தப்படுகிறார்கள். நமது பிள்ளையாவது படித்து முன்னேறினால் போதும் என்ற பெற்றோரின் நம்பிக்கையை சுமந்து வரும் அந்த குழந்தைகளின் குறைந்த பட்ச ஆரம்ப கல்விக்கான வழியை ஆசிரியர்களும், பெற்றோர்க்ளும் சேர்ந்து அடைக்கிறார்கள். அவர்களைக் கண்டுதான் மூக்கைப் பொத்துகிறார்கள். துரத்தியடிக்கிறார்கள். இந்திய உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை மறுத்தது பார்ப்பனியம்.  இன்று அடையாரில் இருக்கும் ஒரு பார்ப்பனப் பள்ளியும், பார்ப்பன முதல்வரும் ஏழைகளை தடை செய்வோம் என்று பகிரங்கமாக பேசுகிறார்கள். புதிய பார்ப்பனியம்! பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் அடிமைகள் என்று பார்ப்பனியமும், வெள்ளை நிற ஆரியர்களைத் தவிர மற்றவர்கள் அடிமைகள் என்று ஹிட்லரின் நாசிசமும் பேசிய வரலாறு இன்று திரும்புகிறது. ஒரு வேளை இந்தியா வல்லரசாக வேண்டுமென்பதற்காக ஏழைகளை மொத்தமாகக் கொன்றுவிடுவார்களோ தெரியவில்லை. அப்போது இந்த கல்வி, கத்திரிக்காய் பிரச்சினை ஏதுமில்லையே?
                கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்… ஏழை மாணவர்களுடன் தங்களது பிள்ளைகள் ஒன்றாக அமர்ந்து படிப்பதைக்கூட நடுத்தர வர்க்கத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பள்ளிக்கூடத்தை விட்டே துரத்த திட்டமிடுகிறது பள்ளி நிர்வாகம். நாட்டைவிட்டே துரத்த திட்டமிடுகிறது மன்மோகனின் அரசாங்கம். ஜெய்தாப்பூரில் அணு உலையை எதிர்த்து போராடும் மக்களை சுடும் அரசாங்கம்  டாடாவின் உயிர்வாழும் உரிமைக்கு பரிந்து கொண்டு வருகிறது. இப்படி, ஏற்றத் தாழ்வுகளை அதிகரித்துச் செல்வது பாசிசத்திலேதான் போய் முடியும். தகுதியிருப்பவர்கள் மட்டுமே இந்த ”வல்லரசில்” வாழ முடியும். பணத்தைக் கொடுத்து நுகரும் வசதியிருப்பவர்களுக்கு மட்டுமே இங்கு இடம். தாகத்துக்கு குடிக்கும் நீரையே  விலை கொடுத்து வாங்கிக் குடிக்கும் நிலையைப்போல சுவாசிக்கும் காற்றுக்கு கூட விலை வைத்தாலும் வைப்பார்கள் இந்த வியாபாரிகள். அப்படி ஒரு திட்டத்தோடு பன்னாட்டு வியாபாரிகள் வந்தாலும் அதில் கையெழுத்திடுவார் மன்மோகன்.
                ஆரம்ப கல்விக்கே இந்தநிலை என்றால், மொத்த கல்வித்துறையையுமே தனியார்மயமாக்க திட்டங்கள் தீட்டியிருக்கிறார் கபில்சிபல். மன்மோகன் சிங் பொருளாதாரக் கதவுகளை திறந்து விட்டது போல, கல்வித்துறையின் கதவுகளை இவர் திறந்துவிடப் போகிறார். பன்னாட்டு பல்கலைகழகங்கள் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இங்கு வியாபாரம் செய்து போட்டி போட்டுக் கொண்டு கல்வியின் ‘தரத்தை’அதாவது Business உயர்த்தப் போகின்றன. இன்று ஆரம்பக் கல்விக்கே பல ஆயிரங்கள் செலவு செய்யும் நடுத்தர வர்க்கம், வெளிநாட்டு  பல்கலைக் கழகங்களின் பகாசுர பசிக்கு என்ன செய்யப் போகிறது? உயர்ந்த படிப்பு, உயர்ந்த தரம், வெளிநாட்டு படிப்பை உள்நாட்டிலேயே குறைந்த விலையில் படிக்கலேம் என்றெல்லாம்  மயக்கி நடுத்தர வர்க்கத்தினரை பந்தாடப் போகிறது, கபில் சிபலின் புதிய கல்விக்கொள்கை. நுகரும் தகுதியுள்ளவரே வாடிக்கையாளர். அப்போது, இன்றைய  ஏழை மாணவர்களின் நிலையை எட்டியிருப்பார்கள்  இன்றைய வாடிக்கையாளர்கள்.  கல்வி அப்போது இவர்களுக்கு எட்டாக்கனியாக  மாறியிருக்கும். அதுதான் தனியார்மயமும் தாராளமயமும் வெளிப்படுத்தும் கோரமுகம்.  இதனை, இன்றே உணர்ந்து சரியான போராட்டத்தை இனங் கண்டு தங்களை இணைத்துக் கொள்வதே தங்கள் பிள்ளைகளுக்கு நடுத்தர வர்க்கம் தரும் உண்மையான கல்வியாக இருக்கும்.

- நன்றி
-சந்தனமுல்லை. வி.மற்றும்
India Times

"

Friday, January 6, 2012

தமிழா .விழி...

எவ்வளவு அடித்தாலும் தாங்கும் தமிழனின் பார்வைக்கு………

டிசம்பர் 31 இரவு பனிரெண்டு மணியை நெருங்கும் வேளையில் ஒருதடவை சென்னைப் பட்டிணத்தின் முக்கிய வீதிகளில் போய் நின்று பாருங்கள்.சூழலே பைத்தியம் பிடித்ததாய் ஆகிப்போக வெறிக் கூச்சலும், வாகனங்களின் இரைச்சலுமாய் அல்லோலப்படும்."ஹேப்பி நியு யர்" என்று அண்ட சராசரங்களும் நடுங்கிப்போக கத்தியபடி கையில் பீர் பாட்டில்களோடு பைக்குகளின் பின்னால் இரண்டு பேர், மூன்று பேர் என்று உட்கார்ந்து பறக்கும் யுவன்களை ஏராளமாய் பார்க்கலாம். ரத்தம் வடியும் உதடுகளாக லிப்ஸ்டிக் அணிந்த யுவதிகளையும் சமதையாக பார்க்கலாம். நட்சத்திர ஒட்டல்களின் கண்டபடி நடனங்கள்....மேற்கத்திய இசை முழக்கங்கள்...அதன் கசிவுகள் வெளிகளில் இப்படியாய் பாய்ந்திட கடற்கரை அலைகளே பதுங்கும்.ஆங்கிலவருடம் நள்ளிரவில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தை தமிழ்ச்சமூகம் எவ்வளவு அழுத்தமாக பதிவு செய்கிறது பாருங்கள்.

அதேநேரம் சில நளினங்களையும் பார்க்கமுடிகிறது. வீடுகளிலிருந்து மக்கள் வெளியே வந்து பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லுவதும், வண்ண வண்ண கோலங்கள் போடுவதும், கேக்குகள் கொடுப்பதும் ரசிக்கிறமாதிரி இருக்கிறதுதான்.

இப்போது அதுபோல இன்னொரு தினம் நாட்குறிப்புகளில் முக்கியமாகி வருகிறது.பிப்ரவரி 14. 'வாலண்டைன் டே' . முதலில் வாயில் நுழைவதற்கே சிரமப்பட்ட அந்த வார்த்தை ப்போது தமிழ்ச் சமூகத்தின் பிரபலமான விஷயம்!. குறிப்பாக நமது மாணவர்கள் புத்தாடை அணிவதும், வாழ்த்து அட்டைகள் வாங்குவதையும், கொண்டாடுவதையும் பார்த்தால் ஆச்சரியமாக ருக்கிறது. ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு நாம் நினைத்திராத காட்சிகள் இவை.

ஆனால் இந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் அரவமே இல்லாமல் நமது திருவிழா ஒன்று தொலைந்து போய்க் கொண்டிருப்பதுதான் சகிக்க முடியாத அவலம். மற்ற தினங்களை, விழாக்களைக் கொண்டாடுவது ஆரோக்கியமானதுதான். ஆனால் நம் அடையாளத்தை அழித்துக் கொண்டு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தைப் பொங்கல்! எப்பேர்ப்பட்ட நாள் அது. இந்த மண்ணின் உற்சவம் அது. ஒளிக்கதிருக்கும், நெற்கதிருக்குமான பந்தம் தொடரும் இயற்கையின் புன்னகை அது.வெள்ளையடிக்கப்பட்ட வீடு புது மணத்தோடு நிறைந்திருக்கும். வாசல்கள் கோலங்களால் சிரித்துக் கொண்டிருக்கும். மஞ்சளும், கரும்பும் லை தழைகளோடும் வேரடி மண்துகள்களோடும் சாத்திவைக்கப்பட்டிருக்கும்.மூட்டப்பட்ட தீயில் பொங்கல் மேலே மேலே எழும்பிவர , நாதஸ்வரம் காட்சிப் படலங்களில் இசையைத் தெளித்தபடி பரவிப் படரும்.புதுப் பானையை மீறிய உற்சாகமாய் பொங்கல் வடிய குலவைச் சத்தங்களில் மனித அழகு சிறகடிக்கும். விடிகாலையிலேயே குளித்து சூரிய வரவுக்காய் காத்திருக்கும் உற்சாகமான தருணம். எல்லோரும் குழந்தைகளாக மாறிப்போகும் இனிப்பானநாள். வீடு தாண்டி பெண்களின் பேச்சும் சிரிப்பும் படபடக்க வீதிகளெல்லாம் குதூகலமாய் கலகலக்கும்.

இப்போது அந்த அழகெல்லாம் காணாமல் போய்விட்டது. மனிதர்கள் மெல்ல எழுந்திருக்கிறார்கள். சாவகாசமாய் கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்து டி.வி களின் முன்னால் உட்கார்ந்து சோம்பல் முறிக்கிறார்கள்.கரும்பை கடிக்க திராணி இல்லாமல் சிறு சிறு துண்டுகளாக வெட்டி லாவகமாய் வேர்க்கடலையைப் போல கொறிக்கிறார்கள்.வாசம் இல்லை.மஞ்சள் இல்லை. உற்சாகம் இல்லை.பண்டிகைக்கான எந்த அடையாளமுமில்லை. என்ன ஆகிவிட்டது? இது எப்படி நேர்ந்தது? யோசிக்கிற பிரக்ஞையும் இல்லை. நமக்கும், நம் வாழ்வுக்கும், நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில்லாத நாட்களையெல்லாம் கொண்டாட துடிக்கிற நாம் நமது பாரம்பரிய திருநாளை எப்படி சாதாரணமாக்கிவிட்டோம். கனவில் மட்டும் பார்த்த மாதிரி, கொண்டு வந்த அற்புதங்களை எப்படி தொலைத்துவிட்டு நிற்கிறோம்.பொங்கல் இந்த மண்ணை, நமக்கு உயிரளிக்கும் உழவுத்தொழிலை, சூரியனை, ஏர் இழுக்கும் மாட்டை மரியாதை செய்யும் வைபவம். நாம் விவசாயத்தையும் அதற்கான பண்டிகையை புறக்கணித்து கொண்டிருக்கிறோம்.

நாம் மெல்ல மெல்ல நம்மை இழந்து கொண்டிருக்கும் இந்த தாழ்வுக்கு பின்புலம் உண்டு. சமூக யதார்த்தத்துக்கு சம்பந்தமில்லாத மேற்கத்திய வாழ்க்கைமுறையில் திளைக்கும் ஆண்களும் பெண்களுமே டி.வி விளம்பரஙகளில் கரையான்களாய் வந்து நம்மை அரிக்கின்றனர். நுனிநாக்கில் நிறைய ஆங்கிலமும், கொஞ்சமாய் தமிழும் கலந்து பேசும் டி.வி அறிவிப்பாளர்களை நாம் தினம்தினம் போதையோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.சாக்லெட், கேக்கின் ருசியில் மரத்துப் போன நாக்கு கரும்பின் ருசி அறியமாட்டேன்கிறது.

அவர்கள் நமக்குள் கூடுவிட்டு கூடு பாய்ந்து கொண்டு இருக்கிறார்கள். மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள மிக முக்கியமான வித்தியாசங்களில் ஒன்று மனிதர்கள் பன்முகத்தன்மை கொண்டவர்களாய் இருப்பதுதான். அதுதான் அழகு. ஆயிரம் வண்ணங்களில்...ஆயிரம் ஆயிரம் மலர்களாய்...மனிதர்கள் பூத்துக் குலுங்குவதுதான் அற்புதம். பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள்,பல கலாச்சாரம் இவற்றோடுதான் மனித சமூகம் காலங்களை கடந்து வந்திருக்கிறது.

அந்த வேர்களுக்கு வென்னீர் ஊற்றி, அழித்து ஒரே மனிதன், ஒரே கலாச்சாரம் என்று உருவாக்குவது நம் வாழ்வின் மீது நெருப்பு வைக்கிற காரியம். வானவில்லை பிய்த்துப் போடுகிற அராஜகம். விழுதுகளையெல்லாம் வெட்டிவீழ்த்திவிட்டால் ஆலமரத்தின் அடையாளம்தான் என்ன? ஆயுள்தான் என்ன? நமது சுயங்களை புதைத்துவிட்டு நாம் யாராய் இருக்கப் போகிறோம்?

ஒருநாள் கண்ணாடி முன் நாம் நிற்கும்போது, கண்ணாடியில் நமது முகமும், உருவமும் தெரியாமல் சம்பந்தமில்லாத யாருடைய முகமோ தெரியப்போகிறது. நினைத்துப் பார்க்கும்போதே அடிவயிற்றில் ஒரு பயம் படருகிறது.

வயக்காட்டுக்குச் சென்று பொங்கல் வைத்து அதை வீட்டில் வைத்துச் சாப்பிட்டதும், அடுத்த நாள் மாடுகளைக் குளிப்பாட்டி அவற்றுக் ஊட்டி விட்டுப் பின் நாம் சாப்பிட்டதும், பொய்யாய் பழங்கதையாய் போயின. இன்னும் பத்திருபது வருடம் கழித்து வரும் தலைமுறையினருக்குப் பொங்கல் என்பதே ஒரு விடுமுறை என்பதைத் தவிர வேறு என்ன விசேசம் என்று சொல்ல ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல முடிகிறது;

வேதனையுடன்

சக தமிழன்

Thursday, June 9, 2011

சமச்சீர் கல்வி

சமச்சீர் கல்வியின் மூலமாக தமிழ்நாட்டில் 'பொதுப்பள்ளி முறை'யை நடைமுறைப்படுத்த முயன்றது முந்தைய அரசு. ஆனால், புதிதாக பதவியேற்ற அரசு எடுத்த எடுப்பிலேயே சமச்சீர் கல்வி முயற்சியை குப்பைக்கு அனுப்பிவிட்டது. மனுநீதி இன்னும் மறையவில்லை என்பதற்கும் ஆதிக்க சாதியினரின் அதிகாரம் குறையவில்லை என்பதற்கும் இது ஓர் எடுத்துக்காட்டு.

இதன்மூலம் 1954 ஆம் ஆண்டின் வரலாறு தலைகீழாக திரும்பியுள்ளது. அப்போது சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் இராஜாஜி
 கொண்டுவந்த குலக்கல்வி திட்டம் காமராசரால் தூக்கி எறியப்பட்டு, எல்லோருக்கும் கல்வியளிக்க வழிசெய்யப்பட்டது. 

இப்போது 2011 இல் எல்லோருக்கும் ஒரேவிதமான தரமான கல்வி என்கிற இலக்கு தூக்கி எறியப்பட்டு, ஆதிக்க மேல்சாதியினர் வீட்டு பிள்ளைகளும், பணம் படைத்தோரின் குழந்தைகளும் தரமாக படித்தால் போதும் என்கிற நிலை வந்துள்ளது.
 
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமச்சீர் கல்வி திட்டத்தை தற்போதைய அரசு கைவிட்டதன் பின்னணி சாதிவெறிதான்! அன்று இராஜாஜி தோற்று காமராஜர் வென்றார், இன்று காமராஜரின் கனவு தோற்று இராஜாஜியின் கனவு நனவாகியுள்ளது.

பொதுப்பள்ளி முறை என்றால் என்ன?

ஏழையான, ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த, கிராமப்புறத்தில் வாழும் படிக்காத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்குக் கிடைக்கும் கல்வி ஒருவிதமாகவும், அதேசமயம், வசதிபடைத்த, மேல்சாதியைச் சார்ந்த, நகர்ப்புறத்தில் வாழும், படித்த பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைக்குக் கிடைக்கும் கல்வி வேறொரு விதமாகவும் இருக்கும் நிலை என்பது நாகரீக சமூகம் என்பதற்கே இழுக்கானதாகும். பள்ளிகளுக்கு இடையேயும் கல்வி முறைகளுக்கு இடையேயும் ஏற்றத்தாழவு இருப்பது சமூக அநீதி. இந்த அவலத்தை மாற்றும் முறைதான் பொதுப்பள்ளி முறை (Common School System) ஆகும்.
பொதுப்பள்ளி முறையில் பலவிதமான கல்வி முறைகள் என்பது ஒழித்துக்கட்டப்படும், எல்லாம் ஒரே முறையாக மாற்றப்படும். சாதி, மொழி, பாலினம், இனம், வாழிடம், பொருளாதார நிலை போன்ற எந்த வேறுபாடும் இன்றி எல்லாக் குழந்தைகளுக்கும் சம அளவு தரமுடைய கல்வி வழங்கப்படும். பள்ளிகளுக்கிடையே தரவேறுபாடுகள் களையப்பட்டு எல்லா பள்ளிகளும் தரம் உயர்த்தப்படும்.

பொதுப்பள்ளி முறையில் மூன்று அடிப்படைகள் முதன்மையானவை:

1. ஒரே விதமான பாடத்திட்டம்/கலைத்திட்டம்.
 
2. மொழிப்பாடங்கள் தவிர்த்து மற்ற அனைத்தும் மாநிலத்தின் முதல் மொழியில் (அதாவது பெரும்பான்மை மக்களின் தாய் மொழியில்) இருக்கும்.
3. பள்ளிச்சேர்க்கை என்பது அண்மைப்பள்ளி முறையில் நடக்கும்
(Neighbourhood School System - அதாவது ஒரு குறிப்பிட்ட சுற்றளவு தொலைவில் வசிப்பவர்கள் மட்டுமே பள்ளிகளில் சேர்க்கப்படுவர்).

மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை முழுவதுமாக பின்பற்றி தமிழ்நாட்டின் சமச்சீர் கல்வி அமையவில்லை என்பது உண்மை. ஆனால், அதைநோக்கிய திசையில் அது இருந்தது. குறிப்பாக, பொதுபாடத்திட்டம் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

பொதுப்பள்ளி முறை - வரலாறு.

1966 கோத்தாரி குழு

சுதந்திர இந்தியாவின் கல்விக்கொள்கையை வகுப்பதற்காக அமைக்கப்பட்ட கோத்தாரி குழு 1966 ஆம் ஆண்டு தமது அறிக்கையை அளித்தது. அதில் "ஏழை, பணக்காரர் என்கிற அடிப்படையில் பள்ளிகள் அமைந்துள்ளதை மாற்றி பள்ளிக்கல்வி என்பது சாதி, சமய, சமுதாய, பொருளதார அடிப்படையில் குழந்தைகளுக்கான கல்வியில் வேறுபாடு காட்டாமல் பொதுப்பள்ளிகளை ஏற்படுத்த வேண்டும்" என்று பரிந்துரைத்தது. கூடவே, அவரவர் வாழும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில்தான் குழந்தைகளைச் சேர்க்க அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

1967 நாடாளுமன்றக் குழு

1967 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட 'கல்விக்கொள்கைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு'வின் அறிக்கை "ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் தனித்தனியாக பள்ளிகள் இருக்கும் முறை ஒழிக்கப்பட்டு, எல்லோரும் ஒன்றாகப் படிக்கும் பொதுப்பள்ளி முறை/அண்மைப்பள்ளி முறை தேவை என்று பரிந்துரைத்தது. இதனையொட்டி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையும் பொதுப்பள்ளி முறையை வலியுறுத்தியது.

1986 தேசியக்கல்விக் கொள்கை

1986 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசியக்கல்விக் கொள்கையில் "பொதுப்பள்ளி முறையை அடைவதற்கான திசையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்" என்று கூறப்பட்டது.

1988 மத்திய அரசின் கல்வி வழிகாட்டுக்குழு

1988 ஆம் ஆண்டின் மத்திய அரசின் கல்வி வழிகாட்டுக்குழு "பத்தாண்டுகளில் இந்தியா முழுவதும் பொதுப்பள்ளி முறையை செயல்படுத்துவதற்காக செயல் திட்டத்தை" அளித்தது.

1990 ஆச்சார்ய இராமமூர்த்திக் குழு

1990 ஆம் ஆண்டில் தேசிய கல்விக்கொள்கையை வடிவமைப்பதற்காக அமைக்கப்பட்ட 'ஆச்சார்ய இராமமூர்த்திக் குழு' தனது பரிந்துரைகளில் "பொதுப்பள்ளி முறை"யை வலுயுறுத்தியது.

1993 யஷ்பால் குழு

பாடத்திட்ட சுமையை குறைப்பதற்காக 1993 இல் அமைக்கப்பட்ட யஷ்பால் குழு தனது அறிக்கையில் மத்திய அரசு நேரடியாக நடத்தும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் மட்டுமே CBSE பாடம் இருக்க வேண்டும் என்றும், மற்ற எல்லா பள்ளிகளும் மாநில அரசின் பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் கூறியது.

2005 NCERT தேசிய பாடத்திட்ட வரையரை

2005 ஆம் ஆண்டின் NCERT தேசிய பாடத்திட்ட வரையரையில் "பொதுப்பள்ளி முறையே அதன் இலக்கு" எனக்கூறி மாநிலங்களுக்கு பரிந்துரை செய்தது.

2010 புதிய அரசியல் சாசனக் கடமை

1950 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்திய அரசிய சாசனத்தில் 45 ஆம் பிரிவு ''இந்த அரசியல் சாசனம் துவக்கப்பட்டுப் பத்தாண்டுகளுக்குள் குழந்தைகள் அனைவரும் பதினான்கு வயது முடிவடையும் வரையில் இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி பெற்வதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்'' என்றது. ஆனால், இந்த பிரிவு அரசுக்கான ஒரு வழிகாட்டி நெறியாக மட்டுமே இருந்ததால், இதனை எவரும் கட்டாயப்படுத்த முடியவில்லை.

ஆனால் புதிய அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் 2009 இல் பள்ளிக்கல்வி அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் 21அ பிரிவில் "அரசு கட்டாயம் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கவேண்டும்" என்கிற் புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2010 முதல் "பொதுப்பள்ளி முறை என்பது தானாகவே நாடெங்கும் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும்".

ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி இன்னும் "ஆளுக்கொரு கல்வி" என்கிற அநீதி நீடிப்பது ஏன்? பல்வேறு தரப்பினரின் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் என பலவற்றுக்கு பின்னர் வந்த சமச்சீக்கல்வி தூக்கி எறியப்பட்டது எதற்காக?
 
மேல்சாதிக்காரனும் பணம் படைத்தோரும் மட்டுமே படித்தால் போதும், மற்றவர்கள் எக்கேடாவது கெட்டு போகட்டும் என்கிற கொடுமைக்கு பின்னால் இருப்பது சாதிவெறிதான். இன்னும் பதினைந்து, இருபது ஆண்டுகள் கழித்துக்கூட - சூத்திரன் வீட்டு பிள்ளைகள் தங்க்ளது வீட்டு பிள்ளைகளுக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்கிற கொடூரமான ஆதிக்க சாதி மனத்தின் வெளிப்பாடுதான் - சமச்சீர்கல்விக்கு தடைவரக் காரணமாகும்.

கடந்தகால வரலாறு - ராஜாஜியின் குலக்கல்வி

1953 இல் சென்னை மாநில முதல்வர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி தொடக்கக் கல்வி முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர முயன்றார். மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம் என்று அதிகாரப் பூர்வமாகப் பெயரிடப்பட்ட அத்திட்டத்தின் கீழ் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் பள்ளிக்காலம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. மீதமுள்ள நேரத்தில் அவர்கள் தங்களது பெற்றொரின் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
 அதுமட்டுமல்லாமல் 6000 கிராமப் பள்ளிகளையும் இழுத்து மூடினார் ராஜாஜி.

திட்டம்:
  பள்ளி வேலை நேரம் இரு நேர முறைகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு நேர முறையும் மூன்று மணி நேரம் கொண்டது. மாணவர்கள் ஒரு நேரமுறை மட்டுமே பள்ளியில் ஆசிரியர்களிடம் பாடங்கள் கற்பர்.
இரண்டாவது நேரமுறையில் மாணவர்கள் தங்கள் தந்தையரிடமிருந்து அவர்களது தொழிலைக் கற்பர்; மாணவிகள் தங்கள் தாயார்களிடமிருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகளைக் கற்பர்.

இரண்டாம் நேர முறையில் தொழில்களைக் கற்பது தவிர மாணவர்கள் தமது ஊர்களில் பொதுப்பணிகளில் – கட்டிடங்கள் கட்டுதல், தூய்மைப்படுத்தும் வேலைகள், சாலைகளைச் செப்பனிடுதல் ஈடுபடுத்தப்படுவர்

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்பது-தானே மனுதர்ம சாஸ்திரம்? 1952 ஜூன் 13 அன்று திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஆச்சாரியார் ராஜாஜி எல்லோரும் படித்துவிட்டால் வேலைக்கு எங்கே போவது? நீங்கள் துணியைக் கிழிக்காமல் சலவை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் என்று உபதேசம் செய்தார்.

இத்திட்டத்திற்கு எதிராக பெரியாரின் தி.க வும் அண்ணாவின் திமுகவும் பல போராட்டங்களை நடத்தின. ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் பெரும் புயலைக் கிளப்பினார் தந்தை பெரியார். 1954 சனவரி 24 இல் ஈரோட்டில் குலக்கல்வி எதிர்ப்பு மாநாட்டினைக் கூட்டி, அனல் பறக்கும் தீர்மானங்களை நிறைவேற்றினார். ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தால் 50 விழுக்காடு மாணவர்களும், 70 விழுக்காடு மாணவிகளும் படிப்பை நிறுத்திய அதிர்ச்சிக்கு உரிய தகவலை தந்தை பெரியார் வெளியிட்டார்.

ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தை வாபஸ் வாங்காவிட்டால், கழகத் தோழர்களே, தீப்பந்தமும், பெட்ரோலும் தயாராக வைத்திருங்கள். நாள் குறிப்பிடுவேன், அக்ரகாரத்திற்குத் தீ வையுங்கள் என்று அபாய அறிவிப்பைச் செய்தார்!
 பொது மக்களின் எதிர்ப்பால் திட்டம் கைவிடப்பட்டது.

ராஜகோபாலாச்சாரி, மார்ச் 1954 இல் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
 அவருக்குப் பின் முதல்வராகிய காமராஜர் திட்டத்தின் எதிர்ப்பாளர். காமராஜின் ஆட்சி காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி ஒதுக்கியதால், மாணவர்கள் பள்ளியில் சேரும் எண்ணிக்கை பத்தாண்டுகளுக்குள் இரட்டிப்பானது.

என்ன செய்வது? இப்போது பெரியார் இல்லையே?!

-நன்றி
-திரு. அருள் & மலர்
 
"இந்த உலகில் எங்கு அநியாயம் நடந்தாலும்
உன் உள்ளம் அடக்க முடியாமல் கொதித்தால்
நீயும் என் தோழனே"
- சே குவேரா

Wednesday, June 8, 2011

கட்டாயக்கல்விச்சட்டம்

கட்டாயக்கல்விச்சட்டமும்
தனியார் பள்ளித் தாளாளரின் ‘மனநிலை’யும்
                ஏழை மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதால் பள்ளியின் ஒழுக்கமும், தரமும் கெட்டுவிடும், ஆசியர்களிடமும் ஒழுங்கு குலையும் என்று சென்னை அடையாறிலிருக்கும் Sri Sankara Senior Secondary School கருதுவதாக வந்த செய்தியைப் பார்த்திருப்பீர்கள்.  இதற்கு எடுத்துக்காட்டாக  ஒரு மாணவரின் செயல்திறனையும் அவரது பொருளாதார நிலைமையையும் இணைத்து ஒரு அறிக்கையை சுற்றுக்கு விட்டுள்ளார் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் சுபலா அனந்தநாராயணன். அதோடு, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், அனைவருக்குமான கல்வி உரிமை மசோதாவை எதிர்த்து போராடும் படியும் தூண்டியிருக்கிறார். முதலில் இந்த கல்வி கற்கும் உரிமை என்றால் என்ன? 60 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டம்தான் அது. பாதிக்கும் மேற்பட்ட இந்தியக் குழந்தைகள் குறைந்தபட்சம் எட்டு வருடம் கூட கல்வி கற்பதில்லை. ஒன்று பள்ளியின் பக்கமே வருவதில்லை அல்லது பாதியில் படிப்பை விட்டு நின்று விடுகிறார்கள். இந்த பிள்ளைகளில் மிகப் பெரும்பான்மையினர் வசதி வாய்ப்பற்ற ஏழை மக்கள்.  இந்த கல்வி கற்கும் உரிமை, கோத்தாரி கல்விக் குழுவினரால் பொது பள்ளிக்கூட அமைப்பை நோக்கிய ஒரு சிறுமுயற்சியாக, 1964-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
                இந்திய கல்வியமைப்பில், சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகள் உருவாக்கியுள்ள ஏற்றதாழ்வுகளை களைவதற்காக செய்யப்பட்ட சமூக சீர்திருத்தமே இந்தப் பொது பள்ளிக்கூட அமைப்பு. இந்த மசோதா 1964,1986 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் முறையே நிறைவேற்ற முயன்றும் தோல்வியையே கண்டது.  இந்த மசோதாவுக்காக, பட்ஜெட்டில் 12,000 கோடிகள்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே, ஆரம்பக் கல்விக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கி வரும் நாடு இந்தியாதான். இதுவும் வருடா வருடம் குறைந்து கொண்டே வருகிறது. இது முதலில் தில்லியில் நடைமுறைக்கு வந்து, இப்போது அனைத்து பள்ளிகளிலும் அமுலாகத் தொடங்கியிருக்கிறது.
                இந்த மசோதாவின்படி, குழந்தைகளை, பெற்றோர்களை இன்டர்வியூ என்ற பெயரில் நேர்காணல் செய்வது மற்றும் கேபிடேசன் கட்டணம் வசூலிப்பது இரண்டுமே தண்டனைக்குரியது. கேபிடேசன் கட்டணம் வசூலித்தால் கட்டப்படும் பீஸ் தொகையைப்போல் 10 மடங்கும்,  குழந்தைகளையும் பெற்றோரையும் நேர்முகம் கண்டால் 25000 ரூ முதல் 50000 ரூ வரையும் அபராதம் வசூலிக்கப்படும். 25 சதவீத இடங்களை வசதி வாய்ப்பற்ற ஏழை மக்களுக்கு ஒதுக்க வேண்டும்.
ஆரம்பக் கல்வியை முடிக்கும்வரை பள்ளி நிர்வாகம் குழந்தைகளை தண்டிப்பதோ அல்லது பள்ளியை விட்டு அனுப்புவதோ கூடாது. ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் அந்த வட்டாரத்திலிருக்கும் பள்ளியிலேயே படிக்க வேண்டும்.இவையெல்லாம் அதில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள். இத்தனைக்கும், கல்வி கற்கும் உரிமை, முதல் எட்டு வருடங்களுக்கு மட்டுமே கல்வியை உறுதி செய்கிறது. (அதற்கு பிறகு அந்த மாணவர்களை பற்றிய கவலை யாருக்கும் இல்லை. பள்ளிகள் நினைத்தால் வெளியேற்றலாம். ) கல்வியை முழுக்க தனியார் மயம் ஆக்கிய நிலையில் இந்த மசோதா எதையும் மாற்றாது. மேலும் இனி அரசுக் கல்லூரிகள், பள்ளிகள் ஏதும் புதிதாகத் திறக்கப்படாது என்ற சாத்தியத்தையும் இம்மசோதா கொண்டிருக்கிறது. முக்கியமாக தனியார் பள்ளிகள், கல்லூரிகள் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதை இம்மசோதா தீர்த்திருந்தால் இப்படி தனியே ஏழைகளை சேர்க்க வேண்டுமென்ற சலுகை தேவைப்படாமாலேயே போயிருக்கலாம்.
                இருப்பினும் இந்த பெயரளவு சலுகைகளைக் கூட தாங்கமுடியாமல் இந்த தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் லாபி வேலையை செய்யத் துவங்கியுள்ளன. இந்த மசோதா இவர்களது வருமானத்தை பாதிக்கிறதாம். அதன் முதல் கட்டமாகத்தான் இந்த இரு பள்ளிக்கூடங்கள் வேலையை காட்டத் தொடங்கியிருக்கின்றன -சங்கரா சீனியர் செகண்டரி பள்ளியும், லேடி ஆண்டாள் பள்ளியும்.. இன்று  பள்ளிக்கூடம் என்பது ஒரு பெரிய பிசினஸ். சென்னையில்தான் எத்தனை வகை வகையான பள்ளிக் கூடங்கள். வகுப்பறைகளில் ஏசியுடன், ஏசியில்லாமல், ஒன்றாம் வகுப்பிலிருந்தே லேப்டாப், பாடதிட்டங்கள்/வீட்டுப்பாடங்கள் ஆன்லைனிலே செய்து அனுப்பும் படியான வசதிக்கொண்டவை, என் ஆர் ஐ பிள்ளைகள் படிக்க என்று ஏராளமான வகைகள் உண்டு. ஒவ்வொரு பள்ளியும் அதன் வசதிகளுக்கும், பெயருக்கும் தகுந்தபடி நுழைவுக்கட்டணங்களை வசூலிக்கின்றன, அவை லட்சங்களில் ஆரம்பித்து ஆயிரங்களில் முடிகிறது. அந்த பிசினஸின் முக்கியத்துவம் கருதித்தான் அரசியல்வாதிகள், ரவுடிகள், அவர்களது வாரிசுகள் என்று பலரும், கல்வி கற்றிருக்கிறார்களோ இல்லையோ கல்வித்தந்தையும் கல்வித்தாயுமாக பரிணாமம் எடுக்கின்றனர். இப்படி, ஆரம்பக் கல்வியிலேயே வர்க்கப் பாகுபாடுகள் நிறைந்திருக்கிறது. வசதி வாய்ப்புள்ளவர்கள் பெரிய பணக்கார பள்ளிக்குச் செல்கிறார்கள். இல்லாதவர்கள், விலை குறைந்த படிப்பை படிக்கிறார்கள். ஆரம்ப கல்வியிபிலிருந்து தொடங்கும்  இந்த முரண்கள் முடிவடையாததது. பொதுவாக, நகருக்குள் இருக்கும், இந்த பள்ளிகளில் படிக்க ஒன்று நடிக நடிகையர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள், வசதியான நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பிள்ளைகளாக இருக்க வேண்டும் அல்லது என் ஆர் ஐக்களின் பிள்ளைகளாக இருக்க வேண்டும். இதுதான் அடிப்படை தகுதி. அதற்கு அடுத்த லெவலில் இருப்பது நடுத்தர வர்க்கத்திற்கான பள்ளிகள். இந்த பள்ளிகளுக்குத்தான் அப்துல்கலாம் கனவு காணச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்-அவர் படித்து வந்த பின்னணியை மறந்துவிட்டு. இந்தியா வல்லரசாவதைப் பற்றி பாடம் நடத்துகிறார். ஏழை மக்களை தூக்கியெறிந்துவிட்டால் இந்தியா வல்லரசாகி விடும் போல.
                உயர்ரகக் கல்வி நிறுவனங்கள், சிறந்த பள்ளி என்பதெல்லாம் ஒரு ஏமாற்று. ஒரு சிறந்த பள்ளி என்பது படிப்பில் எப்படிபட்ட மாணவராக இருந்தாலும் தேர்ச்சியடையச் செய்ய வேண்டும். அதை விடுத்து, பள்ளிக்கூட ஆசிரியர்களும், பெற்றோர்களும்.. சங்கம் அமைத்து எந்த மாதிரியான  குழந்தைகளை சேர்த்து கல்வி புகட்டுவது என்றும் பள்ளிக்கூட சூழலுக்கும் தரத்துக்கும் பங்கம் வராத வகையில் பள்ளியை பாதுகாப்பதும் எங்கள் உரிமை என்று சொல்வது சொத்துரிமை சார்ந்ததேயன்றி கல்விப்பணி சார்ந்ததல்ல. அந்த பிள்ளைகள் வந்து சேர்ந்தால் அனுமதி மறுக்க முடியாது, வகுப்பறைகள் முதல் பள்ளிக்கூடமே பாழாகி விடும், அதோடு உங்கள் பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படுமென்று அந்த தலைமையாசிரியர் பதறுகிறாரே, ஏன்? தங்கள் பிள்ளைகள் ஏழை மாணவர்களோடு  ஒன்றாக அமர்ந்து கல்வி கற்றால் ஆசிரியர்களும் பெற்றோரும் ஏன் கதறுகிறார்கள்? எது அவர்களை தடுக்கிறது? ஏழை மாணவர்கள் அழுக்காக இருப்பார்கள், கெட்ட பழக்க வழக்கங்கள் உடையவர்கள் அதைப் பார்த்து எங்கள் பிள்ளைகளும் கற்றுக் கொள்வார்கள் என்று அரற்றுகிறார்கள்.
                வகுப்பறையில், ஏழை மாணவர்கள் இருந்தால் பாடம் நடத்த கத்த நேரிடும், பாடங்களை படிக்க கஷ்டப்படுவார்கள் என்கிறார்கள் ஆசிரியர்கள் அவர்கள் பங்குக்கு. ஏழை மாணவர்களோடு சேர்ந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் பேச வராது என்றெல்லாம் சாக்கு போக்குகள் சொல்கிறார்கள். குஷ்பூவின் பிள்ளைகள் லேடி ஆண்டாள் பள்ளியில் படிக்கின்றனர். ஏழைகளின் ஓட்டு வேண்டி பிரச்சாரம் செய்த குஷ்பூ அவர்களது பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள நிர்வாகத்தினரிடம் பிரச்சாரம் செய்வாரா?
ஏழை மாணவர்களுடன் பழகுவதால்தான் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் கெட்ட வார்த்தைகளை பேசக் கற்றுக் கொள்வதாக மத்திய தர வர்க்கத்தில் ஒரு பொது கருத்து நிலவுகிறது. ஏன், பணக்கார வீட்டுப்பிள்ளைகள் கெட்டவார்த்தைகள் பேசுவதேயில்லையா? நம்முன் நிறுத்தப்படும் முகங்களைப் பாருங்கள். விளம்பரங்களில் சச்சின் வருவதைப் போல தன்ராஜ் பிள்ளை ஏன் வருவதில்லை? சற்று வெள்ளையாக, படித்தவர் போல நடை உடை பாவனைகளைக் கொண்டிருந்தால் “வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்” என்றுதானே நம்புகிறார்கள். நடைமுறையில், எல்லா பித்தலாட்டங்களும் எங்கிருந்துதான் உதிக்கின்றன என்பதை நாம் அறிவோம். இதற்கு ப.சிதம்பரத்திலிருந்து  உதாரணங்கள் உண்டு. இந்த முரணின் சற்றே பெரிய வடிவம்தான் கடந்த பிப்ரவரி மாதம்  நடந்த திவ்யாவின் படுகொலை. வகுப்பறையில் வைத்திருந்த பணம் காணோமென்றதும் என்ன நடந்தது? ஏழை என்பதாலேயே திவ்யா திருடியிருக்கக்கூடுமென்று பேராசிரியர்களுக்கு சந்தேகம் வந்தது. உடைகளைக் களையச் சொல்லி சோதனை செய்துள்ளனர். ஏன் மற்ற மாணவியருக்குச் அது போல சோதனை செய்யவில்லை? திவ்யாவை மட்டும் அப்படி சோதனை செய்ய என்ன காரணம்? ஏழை எனபதுதானே. ஏழை என்றால் திருடுவார்கள் என்ற பொதுபுத்திதானே. இதே பொதுபுத்தி பள்ளிக்கூட நிர்வாகத்தினருக்கும் இல்லாமலிருக்குமா? இதே பொதுபுத்தி, ஏழைப்பிள்ளைகள் நன்றாக படித்தால் எப்படியெல்லாம் கொட்டப் போகிறதோ?
                நசிந்து போன விவசாயம், நலிந்துவிட்ட தொழில்கள், வேலையின்மை, கடன், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக பிடுங்கபட்ட விளைநிலங்கள்  என்று பல காரணங்களால் மக்கள் இந்தியாவின் வடகோடிக்கும் தென்கோடிக்கும் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பீகார், ஒரிஸ்ஸாவிலிருந்து 100 ரூபாய்க்கும் 200 ரூபாய்க்கும் கூலிக்கு வந்து கட்டிடவேலை முதல் ஓட்டல் வேலை வரை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதேபோல, தமிழக விவசாயிகள் பாத்திரம் பண்டங்களை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக பிழைப்பு தேடி அலைந்துக்கொண்டிருக்கிறார்கள். நிரந்தர வேலையில்லாமல் கிடைக்கும் வேலையை செய்து பிழைக்கும்படி நகரத்தை நோக்கி துரத்தப்படுகிறார்கள். நமது பிள்ளையாவது படித்து முன்னேறினால் போதும் என்ற பெற்றோரின் நம்பிக்கையை சுமந்து வரும் அந்த குழந்தைகளின் குறைந்த பட்ச ஆரம்ப கல்விக்கான வழியை ஆசிரியர்களும், பெற்றோர்க்ளும் சேர்ந்து அடைக்கிறார்கள். அவர்களைக் கண்டுதான் மூக்கைப் பொத்துகிறார்கள். துரத்தியடிக்கிறார்கள். இந்திய உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை மறுத்தது பார்ப்பனியம்.  இன்று அடையாரில் இருக்கும் ஒரு பார்ப்பனப் பள்ளியும், பார்ப்பன முதல்வரும் ஏழைகளை தடை செய்வோம் என்று பகிரங்கமாக பேசுகிறார்கள். புதிய பார்ப்பனியம்! பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் அடிமைகள் என்று பார்ப்பனியமும், வெள்ளை நிற ஆரியர்களைத் தவிர மற்றவர்கள் அடிமைகள் என்று ஹிட்லரின் நாசிசமும் பேசிய வரலாறு இன்று திரும்புகிறது. ஒரு வேளை இந்தியா வல்லரசாக வேண்டுமென்பதற்காக ஏழைகளை மொத்தமாகக் கொன்றுவிடுவார்களோ தெரியவில்லை. அப்போது இந்த கல்வி, கத்திரிக்காய் பிரச்சினை ஏதுமில்லையே?
                கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்… ஏழை மாணவர்களுடன் தங்களது பிள்ளைகள் ஒன்றாக அமர்ந்து படிப்பதைக்கூட நடுத்தர வர்க்கத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பள்ளிக்கூடத்தை விட்டே துரத்த திட்டமிடுகிறது பள்ளி நிர்வாகம். நாட்டைவிட்டே துரத்த திட்டமிடுகிறது மன்மோகனின் அரசாங்கம். ஜெய்தாப்பூரில் அணு உலையை எதிர்த்து போராடும் மக்களை சுடும் அரசாங்கம்  டாடாவின் உயிர்வாழும் உரிமைக்கு பரிந்து கொண்டு வருகிறது. இப்படி, ஏற்றத் தாழ்வுகளை அதிகரித்துச் செல்வது பாசிசத்திலேதான் போய் முடியும். தகுதியிருப்பவர்கள் மட்டுமே இந்த ”வல்லரசில்” வாழ முடியும். பணத்தைக் கொடுத்து நுகரும் வசதியிருப்பவர்களுக்கு மட்டுமே இங்கு இடம். தாகத்துக்கு குடிக்கும் நீரையே  விலை கொடுத்து வாங்கிக் குடிக்கும் நிலையைப்போல சுவாசிக்கும் காற்றுக்கு கூட விலை வைத்தாலும் வைப்பார்கள் இந்த வியாபாரிகள். அப்படி ஒரு திட்டத்தோடு பன்னாட்டு வியாபாரிகள் வந்தாலும் அதில் கையெழுத்திடுவார் மன்மோகன்.
                ஆரம்ப கல்விக்கே இந்தநிலை என்றால், மொத்த கல்வித்துறையையுமே தனியார்மயமாக்க திட்டங்கள் தீட்டியிருக்கிறார் கபில்சிபல். மன்மோகன் சிங் பொருளாதாரக் கதவுகளை திறந்து விட்டது போல, கல்வித்துறையின் கதவுகளை இவர் திறந்துவிடப் போகிறார். பன்னாட்டு பல்கலைகழகங்கள் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இங்கு வியாபாரம் செய்து போட்டி போட்டுக் கொண்டு கல்வியின் ‘தரத்தை’அதாவது Business உயர்த்தப் போகின்றன. இன்று ஆரம்பக் கல்விக்கே பல ஆயிரங்கள் செலவு செய்யும் நடுத்தர வர்க்கம், வெளிநாட்டு  பல்கலைக் கழகங்களின் பகாசுர பசிக்கு என்ன செய்யப் போகிறது? உயர்ந்த படிப்பு, உயர்ந்த தரம், வெளிநாட்டு படிப்பை உள்நாட்டிலேயே குறைந்த விலையில் படிக்கலேம் என்றெல்லாம்  மயக்கி நடுத்தர வர்க்கத்தினரை பந்தாடப் போகிறது, கபில் சிபலின் புதிய கல்விக்கொள்கை. நுகரும் தகுதியுள்ளவரே வாடிக்கையாளர். அப்போது, இன்றைய  ஏழை மாணவர்களின் நிலையை எட்டியிருப்பார்கள்  இன்றைய வாடிக்கையாளர்கள்.  கல்வி அப்போது இவர்களுக்கு எட்டாக்கனியாக  மாறியிருக்கும். அதுதான் தனியார்மயமும் தாராளமயமும் வெளிப்படுத்தும் கோரமுகம்.  இதனை, இன்றே உணர்ந்து சரியான போராட்டத்தை இனங் கண்டு தங்களை இணைத்துக் கொள்வதே தங்கள் பிள்ளைகளுக்கு நடுத்தர வர்க்கம் தரும் உண்மையான கல்வியாக இருக்கும்.

- நன்றி
-சந்தனமுல்லை. வி.மற்றும் India Times

"இந்த உலகில் எங்கு அநியாயம் நடந்தாலும்
உன் உள்ளம் அடக்க முடியாமல் கொதித்தால்
நீயும் என் தோழனே"
                                - “ சே”

Monday, November 29, 2010

நிதீஷ் குமாரின் வெற்றி

நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும் !!
ஜனநாயகம் என்றால் என்ன? இதை பீகார் தேர்தல் முடிவுகளை வைத்தே பார்க்கலாம். மொத்த தொகுதிகள் 243. இதில் நிதீஷ் குமார் கட்சி 115 தொகுதிகளும், அவரது கூட்டணி கட்சியான பா.ஜ.க 91 தொகுதிகளிலும் மொத்தத்தில் இந்தக் கூட்டணி 206 தொகுதிகளில் 4/5 பங்கு வெற்றியை பெற்றிருக்கிறது. அடுத்து லல்லுவின் கூட்டணி 25 தொகுதிகளிலும், காங்கிரசு நான்கிலும், மற்றவர்கள் எட்டு தொகுதிகளிலும் வென்றிருக்கின்றனர். அடுத்து இந்த முடிவுகளின் பின்னே உள்ள வாக்கு விகிதத்தை பார்க்கலாம். நிதீஷ் குமாரின் கூட்டணி சுமார் 40% வாக்குகளையும், லல்லு கூட்டணி 25%, காங்கிரசு 8%, மற்றவர்கள் 27% வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். அதாவது வெற்றி பெற்ற நிதீஷ் குமாரை விட அவருக்கு எதிர்த்து விழுந்த வாக்குகளின் விகிதம் 60%. மேலும் இது பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் விகிதம் மட்டும்தான். அதாவது பீகார் தேர்தலில் வாக்கு விகிதம் 52சதவீதம். அதில் நாற்பது விழுக்காட்டை மட்டுமே நிதீஷ் கூட்டணியோடு பெற்றிருக்கிறார். அதன்படி மொத்த வாக்காளர்களின் விகிதத்தை கணக்கிட்டால் நிதீஷ் பெற்றிருப்பது சுமார் 20 முதல் 25 சதம் வாக்குகளை மட்டும்தான். இதில் பா.ஜ.கவின் வாக்கு விகிதத்தை கழித்தால் இந்த அமோக வெற்றி பெற்ற தலைவரின் மக்கள் ஆதரவு பத்து விழுக்காட்டைக் கூட தாண்டாது.
5,50,46,093 மக்களைக்களைக் கொண்ட பீகாரில் வாக்குரிமை உள்ளவர்கள் 2,90,17,537. இதில் நிதீஷ் குமார் கட்சிக்கு கிடைத்திருக்கும் வாக்குகள் 65,61,903 மட்டுமே. லல்லு கட்சிக்கு கிடைத்திருக்கும் வாக்குகள் 54,66,693. இருவருக்கும் வித்தியாசம் வெறும் ஒன்பது இலட்சம் மட்டுமே. வேறு வழியில் சொன்னால் வாக்களிக்கு தகுதி கொண்ட ஆறு பீகாரிகளில் ஒருவர் மட்டுமே நிதீஷ் கூட்டணிக்கு வாக்களித்திருக்கிறார். எனில் இதுதான் ஜனநாயகமா என்று அதிர்ச்சியடையாதீர்கள். இன்னும் நிறைய இருப்பதால் அதிர்ச்சியை தவணை முறையில் வைத்துக் கொள்ளுங்கள். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வென்றிருக்கிறது என்றால் யாருக்கும் தெரியாது. நிதீஷ் குமார் என்றால்தான் தெரியும். ஒரு தெரயாத கட்சியை வைத்துக் கொண்டு ஒரு தெரிந்த தலைவரின் வெற்றி என்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதா என்று அறிஞர்களிடம் கேட்டால் என்ன சொல்வார்கள்?
அவசர நிலை காலத்திற்கு பிறகு காங்கிரசுக்கு மாற்றாக வந்த கதம்பக் கூட்டணிகள் உருவாக்கிய ஜனதா கட்சி பின்னர் கந்தல் கந்தலாக உடைந்து போனது. அந்த துண்டுகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் மட்டும் உயிர் வாழ்கிறது. அதுவும் நிதீஷ் குமார் என்ற தலைவரது நிழலில் காலத்தை ஓட்டுகிறது. பீகாரில் அந்த கட்சிக்கென்று தொண்டர்கள், அணிகள், இரண்டாம், மூன்றாம் நிலைத் தலைவர்கள் அதிகமில்லை. எல்லாம் ஒன்மேன் ஷோதான். ஒரு தலைவரின் பிரபலத்தை வைத்து மட்டும் ஒரு கட்சி இயங்குகிறது என்றால் அந்த கட்சி மக்கள் திரளோடு துண்டிக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். ஏற்கனவே நமது இந்திய ஜனநாயகத்தில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் இல்லை. அது அதிகார வர்க்கத்திற்கு மட்டும்தான் உண்டு. இந்நிலையில் கட்சி அமைப்பே இல்லாத நிதீஷ் குமார் கடந்த ஐந்தாண்டுகள் எப்படி ஆட்சி செய்தார்? இனி எப்படி ஆட்சி செய்வார்? எல்லாம் அதிகார வர்க்கத்தின் தயவில் நடப்பதுதான். அதாவது பெயருக்கு கூட மக்கள் தலைவர்கள் துணையின்றி முழுமையாக அதிகார வர்க்கம் மட்டுமே அனைத்தையும் தீர்மானிக்கின்ற நிலை.
மக்களால் விரும்பப்படும் தலைவரான நிதீஷ் குமார் அதே மக்களை ஆட்சி செய்வதற்கு மக்களை ஆட்டிப்படைக்கும் அதிகார வர்க்கத்தின் மூலம் தான் முடியும். நிதீஷ் குமார் கையில் வரம்பற்ற அதிகாரம் (இப்படி ஒன்று இல்லை) இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அது மக்கள் பிரதிநிதிகள் மூலம் செயல்படப் போவது இல்லை. சரி, இந்த வெற்றியை நிதீஷ் குமாரும், அவரது ஆதரவாளர்களும் ஊடகங்களும் எப்படிப் பார்க்கிறார்கள்? இது வளர்ச்சி திட்டங்களுக்கான, முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட அரசாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று சொல்கிறார்கள். அப்படி என்ன பீகார் வளர்ந்திருக்கிறது? இந்தியாவின் மிகவும் பின்தங்கிய ஏழை மாநிலங்களில் ஒன்று என்ற தகுதியை பீகார் இன்னும் இழந்துவிடவில்லை. நிதிஷ் குமார் பீகாரில் 2000 கி.மீட்டருக்கு சாலை போட்டிருக்கிறாராம். இந்த சாலைகள் மக்களுக்கு என்ன மாற்றத்தை கொண்டுவர முடியும்?
இந்தச் சாலைகளை புறக்கணித்து விட்டு பீகார் இளைஞர்களெல்லாம் ரயில் ஏறி வேறு மாநிலங்களுக்கு சென்று பிழைக்கிறார்கள். பீகாரின் வாழ்வே இந்த ‘நாடோடி’களின் பொருளாதாரத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது. மறுகாலனியாக்கத்தின் விளைவாக தமிழகத்தின் விவசாயம் திட்டமிட்டு நசுக்கப்பட்டு அதன் விளைவாக மக்களெல்லாம் பிழைப்பிற்காக நகரங்களை நோக்கி நகருவது போன்ற மாற்றம் இப்போது பீகாரில் வேகமாக நடந்து வருகிறது. இந்தியா முழுவதும் கடுமுழைப்பு வேலைகளுக்கு பீகாரிகள் பொருத்த்தமானவர்கள் என்ற பெயரே இருக்கிறது என்பதிலிருந்து இதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஊடக அறிவாளிகள் இதை ஒத்துக் கொள்வதில்லை. மூன்று சதவீதத்திலிருந்த பீகாரின் வளர்ச்சி இன்று 11 சதவீதத்தை அடைந்து விட்டது என்றும் பீகாரிலிருந்து பிழைக்க செல்வோர் எண்ணிக்கை குறைந்து விட்டது என்றும் கூறுகின்றனர். ஆனால் சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பீகார் உழைப்பாளிகளை இப்போது சகஜமாக பார்க்க முடியும். பீகாரில் இதற்கு முன் அரசு என்ற ஒன்றே ஆயுதக்குழு நிலப்பிரபுக்களால் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இருந்து இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது. மேலும் நிதீஷ் குமார் ஆட்சியில் கொஞ்சம் சீர்திருத்தங்கள் நடந்திருக்கின்றன என்பதும் உண்மைதான். ஆயினும் அற்புதம் ஏற்பட்டு அந்த மாநிலமே செல்வத்தில் திளைப்பதான வருணிப்பில் உண்மை இல்லை. நிலவுடமை உறவுகள் ஆதிக்கம் செலுத்தும் பீகாரில், பெரும்பான்மையான மக்கள் நிலமற்ற விவசாயிகளாக இருக்கும் நேரத்தில் அங்கே வளர்ச்சி என்பது யாருக்கு பயன்படும்? எனில் இந்த வளர்ச்சிப் பாதை என்ற சொற்றொடர் எதை, யாருடைய நலனைக் குறிக்கிறது? அதற்கு லல்லுவின் மூலம் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
ஏழைப் பங்காளன் என்ற மாயை மூலம் பீகாரில் பதினைந்து காலம் ஆண்ட லல்லுவும், இப்போது வெற்றி பெற்றிருக்கும் நிதிஷும் சோசலிச கொள்கைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரே கட்சியில் இருந்தவர்கள்தான். பொதுவில் ஏழைகள், ஒடுக்கப்பட்ட சாதிகள், சிறுபான்மையினர் நலன் என்ற வகையில்தான் அவர்களது ஆளுமை உருவானது. இதில் சாதாரண மக்களின் தலைவராக லாலுவும், நடுத்தர வர்க்கத்தின் அபிமானம் பெற்ற அறிவாளி தலைவராக நிதீஷூம் உருவெடுத்தார்கள். லாலுவின் ஆட்சியில் தாதாயிசமும், ஊழலும் கொடிகட்டிப் பறந்தது. அவரே மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிறை சென்றார். மனைவி, மகன், மச்சான் என முழுக் குடும்பத்தையும் அரசியலில் இறக்கி பெரும் சொத்துக்களை சுருட்டினார். எம்.ஜி.ஆர் ஏழைக் கிழவிகளை கட்டிப்பிடிப்பது போன்ற மலிவான நடிப்புக்கு லாலுவும் பெயர் போனவர். சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட லாலுவின் ஆட்சி மீது பீகார் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதும் அந்த வெறுப்பை நிதீஷ் குமார் அறுவடை செய்து கொண்டார் என்பதும் உண்மையே.
சென்ற முறை லாலு ரயில்வே அமைச்சராக இருந்த போது என்ன நடந்தது? ஏதோ லாலு பயங்கரமாக வேலை செய்து ரயில்வேயே இலாபம் கொழிக்கும் துறையாக மாற்றினார் என்று ஊடகங்களே வியந்தன. அமெரிக்காவிலிருந்து வந்த எம்.பி.ஏ மாணவர்களுக்கு லாலு வகுப்பு கூட நடத்தினார். இதில் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் பீகாரில் நிதீஷ்குமார் செய்த வளர்ச்சி திட்டங்களைப் போன்று லாலு இரயில்வேயில் செய்து காட்டினார் என்று ஏன் கூறக் கூடாது? ஆனால் உண்மை என்ன? லாலுவுக்கு முந்தைய பத்தாண்டுகளில் இரயில்வேயின் அடிக்கட்டுமான திட்டங்கள், புதிய இரயில் பாதை, குறுகிய பாதையை அகல பாதையாக மாற்றுவது போன்ற திட்டங்கள் வேகமாக நடந்தன. இதனால் அப்போது இலாபம் இல்லாமல் இருந்தது. இது முடிந்த பின்னர் இரயில்வேயின் இலாபம் அதிகரித்தது. கூடவே இந்தியாவெங்கும் மக்கள் பிழைப்பிற்காக இரயில்கள் மூலம் இடம்பெயர்வதும் நடந்தது. இப்படி காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாகத்தான் லல்லுவின் இரயில்வே இலாபம் ஈட்டியதும். இந்தக் கதை கொஞ்சம் நிதிஷின் பீகாருக்கும் கூட பொருந்தும்.
ஆகவே வளர்ச்சித் திட்டங்கள், முன்னேற்றம் என்பதெல்லாம் நடுத்தர வர்க்கத்தின் மொழியில் சொல்லப்படும் விசயங்கள். அன்றாட வாழ்க்கைத் தேவைகளை பொருட்படுத்தாமல் வாழும் ஏழைகளுக்கு நல்ல சாலை, நல்ல மருத்துவம், நல்ல கல்வி இருப்பதால் என்ன பயன்? அவர்களுக்கு அவை ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை. அவை கையருகே இருந்தாலும் அந்த மக்கள் அவற்றை எட்டிக்கூட பார்ப்பதில்லை. ஆக பீகாரின் நடுத்தர வர்க்க அவாதான் அந்த வளர்ச்சித் திட்டங்கள். வளர்ச்சித் திட்டங்களின் கட்டுமான பணிகள் மூலம் முதலாளிகளுக்குத்தான் பலன் அதிகம். லாலு ஆட்சியில் கொடிகட்டிப் பறந்த சாதி அரசியலுக்கு நிதீஷ் குமார் வேட்டு வைத்து விட்டார் என்று கூறுகிறார்கள். லாலுவின் கூட்டணியில் யாதவ் சாதியும், முசுலீம்களும்தான் பிரதானமானவர்கள். யாதவ் சாதியில் உள்ள பண்ணையார்களே லாலு ஆட்சியில் கொழித்தார்கள் என்பதால் ஏழை யாதவ மக்கள் லாலுவை இப்போது புறக்கணித்திருப்பதும் இயல்பானதுதான். இசுலாமிய மக்களைப் பொறுத்தவரை இந்து மதவெறியரை யாரும் எதிர்க்க முடியாது என்ற அவலமான யதார்த்தத்தில் அவர்களுக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை. மத ஒடுக்குமுறையை விட பொருளாதார ஒடுக்குமுறை அதிகம் இருக்கும் காலத்தில் அவர்கள் அரசியல் பார்வையும் தேவையும் கூட மாறத்தான் செய்யும்.
எனவே பீகாரில் உள்ள சாதி ஆதிக்கம் இன்னமும் மாறிவிடவில்லை. ரன்பீர் சேனா முதலான ஆதிக்க சாதி கிரிமினல் படைகள், மற்றும் சங்கங்களில் பா.ஜ.க, ஜனதா தளம், காங்கிரசு கட்சியினர்தான் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். ஆக வர்க்க ரீதியில் நடுத்தர வர்க்கத்தையும் சாதி ரீதியில் ஆதிக்க சாதிகளையுமே நிதீஷ் குமார் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இயல்பாகவே ஆதிக்க சாதியை முன்னிறுத்தும் பா.ஜ.க இந்த தேர்தலில் பெருவெற்றி பெற்றிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது. எனவே நிதிஷ் குமார் வெற்றி சாதியை ஒழித்திருக்கிறது என்று கூறுவது அறியாமை. உண்மையில் மீண்டும் ஆதிக்க சாதிகள் தழைத்தோங்குவதையே இந்த வெற்றி அமல்படுத்தப் போகிறது. ஆனால் இந்த முறை அது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அதாவது ஆதிக்க சாதியின் ஒடுக்குமுறை சமூக அளவில் இருப்பதை விட அரசு எந்திரத்தின் மூலமாக நடந்தேறும். என்ன இருந்தாலும் நிதிஷ் குமாரின் ஆட்சி சட்டத்தின் ஆட்சியல்லவா?
பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு நரேந்திரமோடியை அனுமதிக்க கூடாது என்று நிதீஷ் குமார் தடை போட்டது சிறுபான்மை மக்களிடத்தில் கொஞ்சம் அபிமானத்தை பெற்றிருக்கலாம். ஆனால் அதனாலேயே பா.ஜ.க சைவப்புலி என்றாகி விடாது. அவர்கள் இந்துத்வ கொள்கைகளில், கலவர வழிமுறைகளில் இன்னமும் உறுதியாகத்தான் இருக்கிறார்கள். பீகாரைப் பொறுத்தவரை சந்தர்ப்பவாதமாக மதவெறி முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள், அவ்வளவே. பீகார் அனுபவத்தை வைத்துக் கொண்டு பா.ஜ.க தனது மதத் தீவிரவாதத்தை கைவிட வேண்டுமென ஊடக அறிவாளிகள் விரும்புகின்றனர். அப்படிப்பார்த்தால் குஜராத் அனுபவத்தை என்ன செய்வது? குஜராத்திலும் பெருங்கலவரத்தின் மூலம் இசுலாமிய மக்களை இனப்படுகொலை செய்து பின்னர் வளர்ச்சித் திட்டங்கள் என்று பேசி மோடி இருமுறை ஆட்சியை பிடிக்க வில்லையா? வளர்ச்சித் திட்டங்களும், வன்முறைக் கலவரங்களும் குஜராத்தில் பலித்திருப்பதை வைத்து அதையே முழு இந்தியாவுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று தீவிர ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் சொல்கிறார்கள். மேலும் குஜராத்தில் பேசப்படும் வளர்ச்சித் திட்டமும் கணிசமாக முதலாளிகள், மேட்டுக்குடியினர், நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியலோடு சம்பந்தப்பட்டதுதான். ஏற்கனவே முன்னேறிய மாநிலமாக இருக்கும் குஜராத்தில் மதவெறியும், பொருளாதார முன்னேற்றமும் வியக்கத்தக்க அளவில் ஒன்று சேர்ந்திருக்கிறது. எனவே பா.ஜ.க இன்னமும் இந்த பாதையிலேயே பயணிப்பதற்கு குஜராத் முன்னுதாரணமாக இருக்கிறது. ஆனால் குஜராத் மாதிரியை வைத்து வட இந்தியாவில் பா.ஜ.க காலூன்ற முடியாது என்பது பீகாரைப் பொறுத்த வரையில் உண்மைதான். குஜராத்தை தாண்டி செல்வாக்கு இல்லாத மோடியை பிரதமர் ஆக்கும் கனவும் சில இந்து மதவெறியர்களுக்கு உண்டு. அதை தாராளமய ஆதரவு பா.ஜ.க தலைவர்கள் விரும்புவதில்லை. அவர்களுக்கு வேண்டுமானால் பீகார் வெற்றி இனித்திருக்கலாம். எனினும் முழுமையில் இந்துமதவெறியை அடிப்படையாக கொண்டுஇயங்கும் பா.ஜ.கவை அனைத்து பிரிவு இந்து மதவெறியர்களும் ஒரே மாதிரிதான் பயன்படுத்துகிறார்கள். காங்கிரசு, லாலுவை எதிர்ப்பதற்காக பா.ஜ.க உடன் ஒரு விரும்பாக் கூட்டணியை வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நிதீஷ் குமார் இருப்பதாகவும் சொல்ல முடியும்.ஆக கூட்டிக் கழித்து பார்த்தால் சந்தர்ப்பவாதம் என்ற ஒன்றைத் தவிர இந்தக் கூட்டணியில் வேறு எதுவுமில்லை. நடுத்தர வர்க்க நலனுக்கு பொருத்தமாகவும் பா.ஜ.க கூட்டணி அமைந்திருப்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். முக்கியமாக பா.ஜ.க என்ற மதவெறி கட்சிக்கு கூட்டணி அந்தஸ்தும், பெருவெற்றியும் அளித்திருக்கும் நிதீஷ் குமாரின் சந்தர்ப்ப வாதம் அவரது நேர்மையின் இலட்சணத்தை வெளிக்காட்டுகிறது.
நிதீஷ் குமாரின் எளிமை, ஊழலின்மை, போன்ற இமேஜை வைத்து பா.ஜ.க இது ஊழலுக்கு எதிரான மக்கள் தீர்ப்பு என்று கூவுகிறது. பீகார் வெற்றிக்காக இனிப்பு சாப்பிட்டு கொண்டாடும் தலைவர்கள் அந்த இனிப்பு தொண்டைக்குள் இறங்குதற்குள் ஊழல் மன்னன் எடியூரப்பா பதவியில் தொடரலாம் என்று கூறுகிறார்கள். ஏனிந்த இரட்டை நிலை? இங்கும் கொள்கையல்ல, சந்தர்ப்பவாதமும், சாதியவாதமும்தான் காரணங்கள். எடியூரப்பாவை விலக்கினால் லிங்காயத்து சாதி மக்களது அதிருப்தியை பெறவேண்டியிருக்கும் என்பதாலும், அடுத்து ஊராட்சி தேர்தல்கள் வர இருப்பதாலும் பா.ஜ.க இந்த ஊழல் மன்னனை தெரிந்தே ஆதரிக்கிறது. இது தெரிந்தே எடியூரப்பாவும் தெனாவெட்டாக பேசுகிறார். சந்தடி சாக்கில் நிதீஷ் குமார் அடுத்த பிரதமர் போட்டிக்கு வருவாரா என்று ஊடகங்கள் அவரை உசுப்பி விடுகின்றன. ஆனால் பீகாரில் ஒன்மேன் ஷோ நடத்தும் அவர் இந்தியாவிலும் அப்படி நடத்துமளவு செல்வாக்கு கொண்டவர் அல்ல. சாதிகளாலும், மதங்களாலும், மொழிகளாலும் பிளவுண்டிருக்கும் மக்களை இணைக்க வல்ல அரசியலை கொண்டிராத ஓட்டுக் கட்சிகள் குறிப்பிட்ட அளவில் அத்தகைய இனபேதங்களை தூண்டி விட்டே கட்சி நடத்துகின்றனர். அதனால் இவர்கள் வட்டார அளவில்தான் வண்டி ஓட்ட முடியுமே அன்றி தேசிய அளவில் எழ முடியாது.
அதற்கு காங்கிரசு கட்சி வாங்கியிருக்கும் மரண அடியைக் கூறலாம். ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் எல்லோரும் ஹெலிகாப்டரில் பறந்து படையெடுத்து பிரச்சாரம் செய்தார்கள். கடைசியில் நான்கு தொகுதிகளைத்தான் தேற்ற முடிந்தது. ராகுலை அடுத்த பிரதமர் என்று பேசுபவர்கள் எல்லாம் பீகாரில் அவரை எவரும் சீண்டக்கூட வில்லை என்ற உண்மையை அறிந்தவர்கள்தான். நாளைக்கு ராகுலே அப்படி ஒரு பிரதமராக வந்தால் கூட அது அவரது சொந்த செல்வாக்கில் நடக்கப் போவதில்லை. சந்தர்ப்பவாதக் கூட்டணிதான் அதை தீர்மானிக்கப் போகிறது.
அதன்படி நிதீஷ் குமார் பா.ஜ.கவை கழட்டிவிட்டு காங்கிரசு கூட சேர்வதற்கும் புரோக்கர்கள் முயல்வார்கள். அப்படி ஒரு புரளி உலாவந்தால் பா.ஜ.கவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்று நிதீஷும் அதை உசுப்பி விடலாம்.
ஆக பீகாரின் தேர்தல் முடிவுகள் எந்த நல்ல செய்தியையும் கொண்டிருக்கவில்லை. ஜனநாயகத்தின் அதே அழுகுணி ஆட்டங்கள்தான் தொடருகின்றன. உண்மையான மாற்று அரசியல் சக்தி இல்லாதவரை மக்களும் இந்த ஆட்டத்தையே ஆடியாக வேண்டும். வேறு வழி?
வாழ்க மக்களாட்சி ! பாவம் மக்கள் கட்சி !!
( நன்றி : மலர்வண்ணன் )

Wednesday, November 11, 2009

சுனாமியும் சனியும்....

நம்புங்கள் நாராயணன்களை நம்பினால், நடுவீதியில் நிற்கவேண்டியதுதான்

சுனாமிக்குக் காரணம் சனிப் பெயர்ச்சியா?

மூட நம்பிக்கை வியாபாரிகள் இருக்கிறார்களே அவர்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், அதுதான் வாய்ப்பு என்று தங்கள் கடையை விரித்துவிடுவார்கள்.

நியூசிலாந்து அருகே பசிபிக் பெருங்கடலில் செப்டம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட சுனாமி-யால் 144 பேர் மரணம் அடைந்தனர். இதேபோல், இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது ரத்தத்தை உறைய வைக்கக் கூடிய துயர நிகழ்வுகளாகும்.

இந்தத் திடீர்ப் பேரழிவுக்குக் காரணம் சனிப் பெயர்ச்சிதான் என்று கண்டுபிடித்திருக்கிறார் ஒரு நவீன கொலம்பஸ்.அவர்தான் ஜோதிடர் காழியூர் நாராயணன்.

இதற்கு ஏடுகளின் விளம்பரம் வேறு!
ஆமாம், இவர்தான் கரைகண்ட ஜோதிடர் ஆயிற்றே வந்ததற்குப்பின் காரணம் சொல்லுவதைவிட, வருவதற்குமுன் ஏன் சொல்லவில்லை அபாய எச்சரிக்கையைச் செய்யவில்லை?

இதுபோன்ற பேர்வழிகள் கடந்த முறை தேர்தலில் சொன்ன ஜோதிடங்கள் எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனதற்குப் பின் தலைமறைவாகக் கிடந்தவர்கள் இப்பொழுது ஏதோ ஒரு சாக்கை பயன்படுத்திக்கொண்டும், மக்களின் மறதியில் நம்பிக்கையை வைத்துக்கொண்டும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர் என்பதைப் பொதுமக்கள் சிந்திக்கத் தவறக்கூடாது..

இதுவரை சனிப்பெயர்ச்சி என்பதை மனிதர்களிடத்தில் வைத்துதான் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது நாடுகளை வைத்தும் விளையாட ஆரம்பித்துவிட்டனர். இதன்மூலம் குறுக்கு வழியில் விளம்பரம் கிடைக்கும் அல்லவா!

நிலநடுக்கங்களும், சுனாமிகளும் இப்பொழுதுதான் ஏற்படுகின்றனவா? இதற்கு முன் எத்தனையோ தடவைகள் நடந்ததுண்டே! அதற்கெல்லாம் காரணம் இந்தச் சனிப் பெயர்ச்சிதானா? ஏன் அப்பொழுதெல்லாம் அவ்வாறு கூறவில்லை? அப்பொழுது இருந்த ஜோதிடர்களுக்குச் சாமர்த்தியம் போதாது என்று இந்த நாராயணன்கள் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள் (சொன்னால்தான் பிழைப்புப் போய்விடுமே!) ஆனாலும், உள்ளுக்குள் சிரித்து மகிழ்வார்கள்.

சனி பெயர்ந்தால் அதன் விளைவு பெரிய ஆபத்தாக அல்லவா முடியும்?

கிரகங்கள் ஒன்றையொன்று ஈர்த்திருக்கும் நிலையில், ஒரு கிரகம் பெயர்ந்தால் அதன் விளைவு வேறு கிரகங்களைப் பாதிக்காதா? 75 கோடி மைல் தூரத்தில் உள்ள 73,000 மைல் குறுக்களவு உள்ள சனிக்கிரகம் பெயர்ந்தால், விளைவு என்னவாகும்?
கிரகங்கள் என்ன கூடுவிட்டுக் கூடு பாயும் சித்து விளையாட்டுக்காரர்களா?

இந்த வாரம் ஜூனியர் விகடனில் (4.10.2009, பக்கம் 23) சேஷாத்திரி சாஸ்திரி என்பவர் இந்தச் சனிப் பெயர்ச்சிபற்றி கூறும் கருத்து கவனிக்கத்தக்கதாகும்.

நவக்கிரக வழிபாடு என்பதே இந்த பத்து, இருபது வருடமாக பரவியிருக்கிற தேவையில்லாத கலாசாரம். காசியில் இருக்கும் லிங்கமானாலும், இங்கே ஒரு குளக்கரையில் இருக்கிற லிங்கமானாலும் ஒன்றுதான். இந்தக் கோயிலில் அந்தக் கடவுள் இருக்கிறார், அந்த இடத்தில்தான் அருள்பாலிக்கிறார் என்பதெல்லாம் சிறப்பு சேர்க்க சிலரால் எழுதி வைக்கப்பட்டவைதான். வேறு எந்த தனி முக்கியத்துவமும் இல்லை.

இந்த உலகம் தோன்றியபோதே இருப்பவைதான் சனியும், மற்ற கிரகங்களும். அதற்குப் பின்னால் உருவானவைதான் கோயில்கள். அப்படி இருக்கும்-போது சனீஸ்வரன் திடீரென்று புதுசாக இங்கு வந்தார், அங்கு வந்தார் என்பதெல்லாம் எப்படி சரியாக இருக்க முடியும்? அது ஒரு கோள். அந்தக் கோள், இந்த பிரபஞ்ச இயக்கம் நல்ல முறையில் தொடர்வதற்கு உதவி செய்கிறது. அதற்காக அதற்கு நாம் நன்றி சொல்லலாம், அவ்வளவுதான்! அதை அந்த கிரகத்தின் இடப்பெயர்ச்சி சமயத்தில்தான் சொல்லவேண்டும் என்பதோ... குறிப்பிட்ட கோயிலுக்குத் தேடிச் சென்று தான் சொல்லவேண்டும் என்பதோ கிடையாது. சனியைவிட சூரியனும், சந்திரனும் பூமியில் உள்ளோருக்கு ரொம்ப முக்கியமானவர்கள். அவர்களுக்கும் இடப்பெயர்ச்சி கொண்டாடலாம் என்று கிளம்பினால் என்ன ஆகும்?

இப்படி சொல்கிறவர் தந்தை பெரியாரின் சீடர் அல்ல கருஞ்சட்டைக்காரரும் அல்லர். விடுதலை வாசகரும் அல்லர். சாட்சாத் சாஸ்திரிதான்.

இந்தச் சனிப் பெயர்ச்சி விவரம் எல்லாம் அமெரிக்கர்களுக்கோ, ஜெர்மன்காரர்களுக்கோ தெரியுமா? பல நாடுகளில் எரிமலைகளின் சீற்றங்கள் அடிக்கடி ஏற்படுகின்றனவே காடுகள் பல மாதக் கணக்கில் பற்றி எரிகின்றனவே அவற்றிற்கும் இந்தச் சனிப் பெயர்ச்சிக்கும் தொடர்புண்டு என்று புது மூட்டையை அவிழ்த்துவிட்டாலும் அவிழ்த்து விடுவார்கள் யார் கண்டது?

சுனாமி வருவது, நிலநடுக்கம் ஏற்படுவது, புயல் வீசுவது, கடுமழை பெய்வது ஏன் என்பதற்கான அறிவியல் விளக்கங்களை உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன்கூட ஒழுங்காகச் சொல்லுவான்.

தங்கள் பிள்ளைகளின் புத்தகங்களில் என்ன இருக்கிறது என்பதை குறைந்தபட்சம் பெற்றோர்கள் கருத்தூன்றிப் படித்தாலும் போதுமே, உண்மை விளங்கிவிடுமே!

நம்புங்கள் நாராயணன்களை நம்பினால், நடுவீதியில் நிற்கவேண்டியதுதான் _ எச்சரிக்கை!

'சே'

'சே'